சிலுவைராஜ் சரித்திரம் (2002) காலச்சுமை (2003) லண்டனில் சிலுவைராஜ் (2005)
- விவரங்கள்
- எழுத்தாளர்: க.செந்தில்ராஜா
- தாய்ப் பிரிவு: மாற்றுவெளி
- பிரிவு: டிசம்பர்2010
சமூகத்தில்
ஒடுக்கப்பட்டு, புறந்தள்ளப்பட்டு, கடைநிலையில் பல இன்னல்களுக்கு இடையில்
தன் வாழ்வை நகர்த்தும் தலித்துகள் தங்களின் வரலாற்றை எழுதுவதனால்
மறுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட பல நிகழ்வுகளைப் பதிவு செய்யமுடியும்.
இப்படியான பதிவுகளைக் கொண்டு புனைவாக முதலில் மராட்டியத்தில் இலக்ஷ்மணன்
மானே அவர்களால் எழுதப்பட்டது ‘உபாரா’ (1978). தமிழில் முதல் தலித் தன்
வரலாற்றுப் புனைவாக ‘பாமா’வின் கருக்கு (1992) வெளிவந்தது. இதைத் தொடர்ந்து
தமிழகத்தில் தலித்தியக் கோட்பாடுகளை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான
ராஜ்கௌதமன் தன்வரலாற்றைச் சிலுவைராஜ் சரித்திரம் (2002), காலச்சுமை (2003),
லண்டனில் சிலுவைராஜ் (2005) என மூன்று புனைவுகளாக்கியுள்ளார்.
கிருத்துவ
மதக்குடும்பத்தில் பிறந்த இவர் அம்மத இறுக்கத்தால் தமது இயல்பு வாழ்க்கை
தடைபடுவதையும், அம்மதத்தின் மூடநம்பிக்கைகளையும், பாதிரியார்களின் போலித்
தன்மையையும் தனது சிலுவைராஜ் சரித்திரத்தின் மூலம் சுட்டிக்
காட்டியுள்ளார். மேலும் கிருத்துவர்களின் வரவால் தலித் சமூகத்தில் ஏற்பட்ட
மதமாற்றம், கல்வி, நாகரிகம் போன்ற மாற்றங்கள் எனப் பல இருப்பினும் கூடக்
கிருத்துவமும் இந்துமதத்தின் ஒரு பிரதியாகவே செயல்பட்டது என்பதைப் பதிவு
செய்துள்ளார்.
பள்ளி பயிலுகையில் சில
ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஆசிரியர்களாலும், சகமாணவர்களாலும் சிலுவை படுகிற
அவமானமும், சீனிநாயக்கர் என்பவரின் மகன் சிலுவையைப் பார்த்து
“உங்களுக்கெல்லாம் எதுக்குடா படிப்பு? ஒந் தெருக்காரங்களப் போல
மம்பிட்டியத் தூக்கிக்கிட்டு கூலி வேலைக்கிப் போக வேண்டியது தானே?”
(2002:542) என ஊர்காரர்களாலும் சிலுவை படிப்பதால் படும் அவமானத்தைக் கொண்டு
தலித்துகள் படிப்பதற்காகச் சந்திக்கும் இன்னல்களை அறிய முடிகிறது.
“தேவமார்களுக்குப்
பள்ளங்கள கண்டா ஆகாது, பறையங்கள தொட மாட்டாங்க” என்று சிலுவை சொல்வதன்
ஊடாகச் சூத்திரர்கள், பஞ்சமனைப் பார்த்த விதத்தை அறிய முடிகிறது. தமிழையே
சரியாகப் பேசத்தெரியாத ஊம நாயக்கர் (தெலுங்கு) ஊரணித் தண்ணீரைத்
தலித்துகளுக்குத் தர மறுப்பதனால் தமிழ் மண்ணிற்குரியவர்கள் யார் என்ற
கேள்வியோடு சாதிய இறுக்கத்தினை உணர முடிகிறது. மேலும் வர்க்கத்தைப்
பேசுகின்ற கம்னியூஸ்டுகள் பலர் சாதியைப் பற்றிப் பேசுவதில்லை என்றும்
அப்படியானவர்களிடத்தே கம்னியூஸ்டாக இருந்தும் சிலுவை படும் அவமானமும்
குறிப்பிடத்தக்கது. மேலும் காரல்மார்க்ஸ் ஐரோப்பா என்பதனால் அங்குள்ள
வர்க்க பேதத்தை மட்டுமே பேசியுள்ளார். சாதி அங்கு இருந்திருந்தால் சாதி
பேதத்தையும், அதை ஒழியனுன்னும் என்றும் சொல்லியிருப்பார் என்கிறார். எங்கள்
கட்சி பறையன் கட்சி, சக்கிலியன் கட்சி என ‘ன்’ விகுதி போட்டு வர்க்கத்தைப்
பேசும் கம்னியூஸ்டுகள் சாதியைப் பேசுவதில்லை என 60களில் கம்னியூச
நிலையைப்பற்றி மிக விரிவாகப் பேசியுள்ளார்.
எழுபதுகளின்
நடுவிலிருந்து இந்திய அரசியலில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களான மீண்டும்
பரம்பரை ஆட்சி, அரசியல் படுகொலைகள், சீக்கிய மக்களின் உரிமைப்
போராட்டங்கள், தீவிரவாதம், கட்சிகள் பல உடைந்து புதிய கட்சிகளின் தோற்றம்
என இந்திய அரசியலில் நிகழ்ந்த மாற்றங்களை இப்புனைவின் ஊடாக அறிய முடிகிறது.
மேலும் சமகாலத்துத் தமிழ் சினிமாவின் தாக்கம் நிஜ வாழ்வோடு எப்படிப்
பின்னிப் பிணைந்து இருந்தன என்பது புனைவின் வழிப் புலப்படுகிறது. தவிரக்
கட்டை வாத்தியார் வீட்டைச் சேர்ந்தவர்களும், நாடார் கிறிஸ்தவர்களும்
பங்குச் சாமியாரும் கூட காங்கிரசை ஆதரித்தார்கள். காங்கிரஸ்காரன் என்றால்
ஒரு மரியாதை, அந்தஸ்து இருந்தது. சிவாஜி ரசிகன் என்றால் உயர்ந்த ரசனை
கொண்டவன், படித்தவன் என்ற பேர் இருந்தது. கட்டைவாத்தியார் வீட்டுப்
பிள்ளைகளும் அவருடைய சொந்தக்காரர்களும் காங்கிரஸ் - சிவாஜி பக்தர்களாக
இருந்ததால் சிலுவையும் அவருடைய சொந்தக்காரர்களும் தி.மு.க எம்.ஜி.ஆர்
பக்தர்களாக வளர்ந்தார்கள் (2002:56) என்ற பதிவின் வழி 1967இல் காமராசர்
தோல்வி, அண்ணாதுரை முதல் அமைச்சர் ஆதல் எனத் தொடர்ச்சியாக தி.மு.க. -
அ.தி.மு.க.வின் ஆட்சியின் ஊடாக அரசியலுக்கு எவருடைய ஆதரவு தேவையாக இருந்தது
என்பதைப் பூடகமாக வெளிப்படுத்தியுள்ளார். கிருத்துவப் பறையனாக இருந்ததால்
இடஒதுக்கீடு இல்லையென்பதால் மதுரை ஆதினத்தில் இருந்து மதமாற்றம் பெறுவதன்
ஊடாக, பணியில் சேர்வது என அவரின் இளமைக்காலம் முழுக்க சிலுவைராஜ்
சரித்திரத்தில் பதிவு செய்துள்ளார்.
காலச்சுமையில்
அன்றாடம் வாழ்கின்ற வாழ்க்கையில் சந்திக்கிற விவகாரங்கள், உறவுகளுக்குள்
ஏற்படும் மனக்கசப்பு, வாடகை வீடுகளில் அவரின் சாதியால் படும் அவமானம்,
இரண்டாவது மகள் இறப்பு அதனால் ஏற்பட்ட விரக்தியால் வாசிப்பை
அதிகப்படுத்துதல் என அவரின் வாழ்வியல் போராட்டங்கள் அதிகமாகப்
பதிவாகியுள்ளன. மேலும் அவர் புத்தகம் எழுதுகின்ற, பத்திரிகையில் எழுதுகின்ற
அனுபவம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். இருபுனைவுகளிலும் தலித் சமூகம்
சார்ந்த நம்பிக்கைகள், சடங்குகள் கிராமத்தில் நடக்கின்ற காதல் விவகாரங்கள்
எனப் பல நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இவ்விரு புனைவுகளிலும் பயன்று வரும்
பல்வேறு நுட்பமான கூறுகளோடு இதனை வாசித்தால் தலித்துகளின் வாழ்வியல்
சிக்கல்களை உணர முடியும். அயோத்திதாச பண்டிதரை உள்வாங்கிக்கொண்ட இவர்
அவருடைய சுய எள்ளல் தொனியோடே புனைவுகளைப் படைத்துள்ளார்.
இவ்விரு
புனைவுகளின் பாணியில் லண்டன் பயணத்தை மையமிட்டு எழுதியுள்ள புனைவு
“லண்டனில் சிலுவைராஜ்”. இதில் ஒரு மேலைநாட்டுப் பண்பாட்டுச் சூழலை “ஓர்
இந்தியப் பயணியின்” பார்வையில் அவதானிக்கவும் விமர்சிக்கவும் செய்கிறது.
இந்நூல் சிலுவை நேரில் கண்டு அனுபவித்திராத ஒரு வித்தியாசமான
நாகரிகத்தையும், கலாச்சாரத்தையும் அங்கு கண்டு ரசிக்கிறான் அது அவனுக்கு
முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. அவை எல்லாமே அவனுடைய இந்தியத்தனமான
கற்பனையின் எல்லைக்குள் அப்பாற்பட்டவையாகவே இருக்கிறது. பால்யம் முதலாக,
சாதியச் சிக்கலில் சிக்குண்டு கிடந்த சிலுவைக்கு லண்டன் மாநகர பயணம், அவை
எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவையாக ஒரு கனவு உலகமாகவே சஞ்சரிக்கிறான்.
வறுமை,
அறியாமை, பாகுபாடுகள், பாரபட்சங்கள் இவையெல்லாம் பிறப்புரிமைகளாக நின்று
நிலைத்துவிட்ட ஒரு நாகரித்தில் ஆன்மீகம், ஆத்திகம் X நாத்திகம், ஆன்மா X
பொருள், மோட்சம் X நரகம், அறம் X அக்கிரமம் பற்றிய சப்தங்கள் ஓசையிடம்
சரியான சிவில் சமூக நாகரீகத்தில் இந்த மாதிரி ஓசையிருக்காது; அங்கே
வேறுவிதமாக போராட்டங்களும் பேச்சுவார்த்தைகளும் நடக்கும் (2005 : 171)
என்பதைச் சிலுவை இப்பயணத்தினூடாக உணர்கிறான். இப்படியான இவரின் மூன்று
புனைவுகளும் வெவ்வேறு கதைக்களன்களாக இருப்பினும் அவை சமூகக் கட்டமைப்புகளை
எள்ளி நகையாடிக் கட்டுடைப்பவைகளாகவே உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக