வியாழன், 5 நவம்பர், 2015

வேல.ராமமூர்த்தியின் படைப்புகள்


வேல.ராமமூர்த்தியின் படைப்புகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியர் இந்தியா முழுமையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் ஒருபுறம் கல்விக் கூடங்களில் ஆங்கில மொழி கற்பிக்கப்பட்டு அரசாங்கப் பணிக்கான ஆள்சேர்ப்பு நடந்தது. மற்றொருபுறம் சரியாகக் கல்வி கிடைக்காதவர்கள் தங்களின் குலத்தொழிலைத் தொடர்ந்து வந்தனர். வறுமையின் காரணத்தால் சில சாதியினர் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற செயல்களையும் செய்து வந்தனர். அவர்களை ஒடுக்க அல்லது சீர்திருத்தம் செய்ய 1871ஆம் ஆண்டில் இந்தியா முழுமையும் குறிப்பிட்ட சில சாதிகளின் மீது குற்றப் பரம்பரைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1911ஆம் ஆண்டில் தமிழகத்தில் குற்றப்பரம்பரைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. பிரமலைக்கள்ளர் போன்றோர் அதில் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.
இக்குற்றப்பரம்ப்பரைச் சட்டம் கொண்டு வரப்பட்டு ஒரு நூற்றாண்டு முடிந்த சூழலில் (1971) வேலராமமூர்த்தி அம்மக்களின் வாழ்நிலை குறித்துச் சிறுகதையாக எழுதத் தொடங்குகிறார். தான் எழுதத் தொடங்கிய காலகட்டத்தைப் பற்றி இவர் கூறுவது,
குடிப்பதைக் குற்றமாக்கி வைத்திருந்த அரசங்கம். 1967இல் பொதுத் தேர்தலில் மண்ணைக் கவ்வியது. 1971இல் தமிழகம் முழுவதும் கள்ளு, சாராயக் கடைகள் திறக்கப்பட்டன. விலக்கி வைக்கப்பட்டிருந்த மது சிங்காரித்துக் கொண்டு தெருவுக்கு வந்தது. விலங்கு கழற்றப்பட்ட அடிமைகள் போல், சுயராஜ்யமாய் திமு திமு எனக் கள்ளு சாராயக் கடைகளுக்குள் நுழைந்தனர். சுதந்திரமான சுதந்திரம். அப்படி ஒரு சுதந்திரம் ! எதையோ..யாரையோ பழிவாங் கும் ஆவேசத்தோடு எல்லோரும் குடிக்கப் பழகினார்கள். விளை யாட்டுப்போக்கில் மதுவுக்கு அறிமுகமானார்கள், மெல்ல மெல்ல அடிமையானார்கள். பகலெல்லாம் திருவிழா கொண்டாட்டமானது (2007 : முன்னுரை).
வேலராமமூர்த்தி ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியில் பிறந்தவர் என்பதால் இவ்வூரும் இதன் அண்டை கிராமங்களும் கதைக்களமாகிறது. இவர் இடதுசாரி சிந்தனையாளர் என்பதாலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர் என்பதா லும் அவ்வியக்கத் தத்துவச் சிந்தனைகளைப் பிசகாமல் தன் கதை களில் பயன்படுத்தியுள்ளார். இவர் எழுதத் தொடங்கிய காலகட்டம் (1871) இடதுசாரிகள் தமிழகத்தில் பன்முகத் தன்மையோடு பரவிய காலகட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் சிறுகதை பெரும்பாலும் சுயசாதி (தேவர்) பற்றியது, எனினும் விமர்சனப் பார்வையோடு படைத்துள்ளார். இதனால் இவருக்கு ஏற்பட்ட சிக்கலை பின்வருமாறு கூறுகிறார்.
என் துவக்க (தொடக்க) காலஎழுத்துகள் என் உறவுக்காரர்களின் கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளாயின ஒளிவு மறைவின்றி அவர்களை நான் எழுதிக்கிழித்த கிழிப்பில் என்னைக் கொலை செய்து விடவும் துணிந்தனர். என் கோபத்திற்கு தார்மீக நியாயம் இருந்தது. என் மீதான அவர்களின் கோபத்திற்கும் நியாயம் இருந்தது. பெருத்த இழப்பு களுக்குப் பின்பும் என் எழுத்துத் தடம் மாறக் காணோம். என் எழுத்துக்கான தேவை என் மண்ணில் இன்னும் இருப்பதால் களம் மாறாமல் கதை சொல்லி வருகிறேன். வாசகனின் கபாலத்தைப் பிளந்து, அறிவையும் புத்தி மதிகளையும் குடம் குடமாய் கொட்டு கின்ற வேலையை நான் செய்தவனில்லை. பாமரர்களையும் கொஞ்சம் படித்தவனையும் கோபம் கொள்ளச் செய்திட எழுதி னேன், அது நடந்தது ( 2007: முன்னுரை)
இவரின் கதைகளின் நெடுகிலும் ஆடு திருடுவதையும் அதற்குப் பயன்படுத்தும் உத்திகளும் ஆட்டுக்கறி அதன் சுவைப் பற்றியுமான பதிவு தொடர்ச்சியாக வருகிறது. சாமிக்கு நேர்த்திக்கடன் விடுதல், கோயில் விழாக்களில் ஆடுவெட்டி பூசையிடுதல் அதற்காகக் கூடும் மக்கள் எனத் தேவரினத்தோடு ஆடும் அதன் கவிச்சியும் பிரிக்க முடியாததாக உள்ளதைக் காணமுடிகிறது. காட்டாக,
தலை, கால், குடல், ரத்தம் எதையும் கழிக்காமல் சமைக்கனும். ஆட்டுத்தோலைக் கூடத் தீயிலே வாட்டி, ரோமத்தை உரசி விட்டுத் தனிக்குழம்பு வைக்கனும்.(2011:80)
சங்க இலக்கியத்தில் ஆநிரை கவர்தல், மீட்டல் போரில் வென்ற களிப்பில் மதுவருந்திவிட்டு ‘வெறியாட்டு ஆடிய தமிழனின் நீட்சியை வேலராமமூர்த்தியின் கதைகளில் காணமுடிகிறது. மேலும் அம்மக்கள் சார்ந்த நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவை பதிவாகியுள்ளன.
கோயில் தலத்திலே கிடக்கிற பத்து காசை எடுத்துப் பையிலே போட்டாலும் கை, காலு சுகத்தோட ஊர் திரும்ப முடியாது. வாந்தி, பேதி, மயக்கம் வந்து சுருட்டி விடும் சுருட்டி. ஆளைக் கூட கை வச்சாலும் வச்சுரும் (2011:80).
 மேலும் அம்மக்களின் மூர்க்க குணத்தையும் முன்கோபத்தையும் உடைய மனபோக்கைப் பிரதிபலிக்கும் வகையில் வரும் விடயங்கள் பதிவாகியுள்ளது.
கலகம் வரத்தான் செய்யும். அதுக்காக போற எடமெல்லாம் கலகம் பண்ண முடியுமா? ஒரு கலகம்னாலும் உருப்படியா ரெண்டு பேரை வெட்டிச் சாய்கனும். அப்போதான் சுத்துப்பட்டுக்காரன் பயப்படு வான். இல்லென்னா எவனும் மதிக்கமாட்டான். பொழப்பு கெட்டுப் போகும் (2011:305)
இளவட்டங்கள் நினைப்பெல்லாம் போகிற இடத்தில் கலகம் வரனும் மனம் போன போக்கில் மனுசங்களை வெட்டிச் சாய்க்கனும், படப்புகளுக்குத் தீ வைக்கனும்(2011:312)
எனக் கதைகளில் ஆங்கங்கே வெட்டருவளும் வேல்கம்புகளும் தலைத்தூக்குகின்றன.
வேலராமமூர்த்தி, சுயசாதியைப் பற்றி மிகுதியாக எழுதி இருப்பி னும் கூட, இவரின் கதைகள் பெருநாழி கிரமத்தை மையமிட்டது என்பதால் அவ்வூரில் உள்ள மற்ற சாதிகளைப் பற்றியும் எழுதியுள் ளார். குறிப்பாக, தென்தமிழகத்தில் உள்ள சாதிய சிக்கல்களை இவரின் கதைகள் கவனப்படுத்துகின்றன. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட வர்களான அம்பட்டர், அருந்ததியர், சக்கிலியர், பகடை, வண்ணார் முதலான பலரின் வாழ்வியல் சிக்கல்களை மையமிட்டு அவர்களின் வலியினைச் சரியாகப் பதிவு செய்துள்ளார்.
’ஆசை... தோசை...’ என்ற கதையில் ஒரு அம்பட்டர் ஓட்டலில் மேசையில் அமர்ந்து சாப்பிட்டதால் விழும் செருப்படி, பினம் வெட்டி என்ற கதையில்,
பொனம் எரிக்கிற புலையன் நாக்கு கறி கேக்குதோ!, மரியாதை யாப் போயிருஞ். செருப்பு பிஞ்சிறும். காலங்காத்தால கடனுக்கு வந்து நிக்கிறியேடா அவுசாரி மகனே! கடையத் தெறந்ததும் கடன்காரத் தேவடியா மகன் மூஞ்சியிலேயா முழிக்கனும்! தராசு படிக் கல்லை எடுத்துக் குறி பார்த்து, முனியாண்டியின் நெற்றிப் பொட்டில் எறிந்தார். (2011:222)
’கொட்டடிஞ் கொட்டடிஞ் குருவக்கா’ என்ற கதையில் அருந்ததியர் காலனி பெண் குருவக்கவைக் கைகுழந்தையுடன் செய்யாத குற்றத்திற்காக காவல் நிலையத்தில் வைத்திருந்ததை எதிர்க்கும் வகையில், உள்ளுர் கொட்டுக்காரர்கள், கருப்பன் தலைமையில் கொட்டடித்து ஊர்ஜனப்படுத்தியதால் காவலர்கள் குருவக்காவை விடுதலை செய்துவிடுகின்றனர்.
ஊருகஞ்சி வாங்கிகுடிக்கிற வண்ணாப்பயளுக்கு என்ன திமிரு இருந்தா... கழுதைகளை விட்டு என் வெள்ளாமையை அழிப்பீங்க...! (2011:110) என ஆதிக்க சாதி தோப்புக்காரன் வண்ணானை அடித்துக் கொன்று விடுகின்றான்.
இஸ்லாமியரின் பள்ளிவாசல் முன்பு இந்துக்களின் சடங்கு சார்ந்த ஊர்வளங்கள் செல்லும் போது கொட்டடிப்பதால் ஏற்படும் சண்டைகளை மையமிட்டு ‘நெருப்பிலும் பூக்கும்’, ‘குர்ஷித்’ போன்ற சிறுகதைகள் படைக்கப்பட்டுள்ளன. குர்ஷித் என்ற சிறுகதை ஒர் ஊரில் உள்ள இந்துக்கள் அவ்வூரில் உள்ள இஸ்லாமியர் அனைவரை யும் ஒரு வீட்டில் போட்டு தீயிட்டுக் கொளுத்தும் கொடுமையைக் கதைக்களமாகப் படைத்துள்ளார்.
இவரின் கதைகளில் பெண்கள் வருணனை மிகுதியாக வரு கின்றது. காட்டாக,
கள்ளு விக்கிற தேனம்மாளுக்கு கிண்ணிக் கோழி மாதுரி கட்டு சொட்டான திரேகம் (2011:218). லக்ஷ்மி, மாநிறமாய், கூட்டிலிருந்து தெறித்து விழுந்த தெள்ளு போல் ‘கடக்’ என்றிருப்பாள். இடுப்புக்கு கீழே தொங்கும் தலைமுடி...(2011:53). பெண்ணுக்கு பெண் பிட்டுத் திங்க ஆசைப்படும் லச்சனக்காரிஞ் (2011:69). சாதியில சக்கிலிச்சினாலும்ஞ் சனகன் மகள் சீதை போல லச்சணம்! ஊரே வாய்பாறும். (2011:86). அரச குதிரை போல் வாளிப்பான உடம்புக் காரி. விரல் பருமனில் வில்லாய் நெளிந்திருக்கும் புருவக் கட்டு...(2011:125). என்பன போன்று பல இடங்களில் வர்னிக்கிறார்.
அம்மண்ணில் ஏற்படுகின்ற வறட்சி அதனால் ஏற்படுகின்ற இழப்புகள், பிழைப்புத்தேடி தஞ்சைப் போன்ற இடங்களுக்குப் புலம்பெயர்தல் போன்றவற்றை மையமிட்டு கதைகளை எழுதி யுள்ளார்.
இராணுவத்திலிருந்து விடுமுறை வரும் போது ஊரில் நடந்த வற்றைக் கருவாகக் கொண்டு கதைகளைப் படத்துள்ளார். அவற்றில் பெரும்பாலும் இறப்புகள் இவரைப் பாதிப்படைய செய்திருக்கிறது. இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின் உள்ளூர் தபால்காரராகப் பணிபுரிந்துள்ளார். அதை மையமிட்டும் கதைகளைப் படைத் துள்ளார். இவரைப் பற்றிப் பாரதி கிருஷ்ணகுமார் கூறுவது,
தன்னுடைய எல்லாக் கதைகளையும் அந்த மண்ணிற்குள்ளே இருந்து மட்டுமே படைத்திருக்கிறார் வேலா. அவை கதைகளே அல்ல; வாழ்க்கைச் சித்திரங்கள் இராணுவப்பணி, தபால்துறைப் பணி, தொலைக்காட்சித் தொடர், நாடகம், தொழிற்சங்கம், அறிவியல் இயக்கம், தமுஎச, சினிமா என்று பல்துறை வாழ்வியல் அனுப வங்கள் இருந்தும் தனது கதைகளுக்கான களத்திற்கு, இன்னும் தான் பிற்ந்த ஊரான பெருநாழி கிராமத்தையே சுற்றித்திரிகிறார் (2011: முன்னுரை)
வேலராமமூர்த்தியின் சிறுகதைகள் நீளும் ரெக்கை (2002), வேட்டை(2007) என்ற இரண்டு தொகுப்புகளைக் காவ்யா வெளியிட் டுள்ளது. இவர் கதைகளின் முழுத்தொகுப்பாக 2011இல் வம்சி புக்ஸ் வெளியிட்டுள்ளது.
சிறுகதைப் படைப்புகள்
நீளும் ரெக்கை(சிறுகதை), காவ்யா பதிப்பகம், சென்னை.2002.
வேட்டை(சிறுகதை), காவ்யா பதிப்பகம், சென்னை.2007.
வேலராமமூர்த்தி கதைகள் (சிறுகதை), வம்சி புக்ஸ், திருவண்ணாமலை. 2011.
குற்றப்பரம்பரை (நாவல்), காவ்யா பதிப்பகம், சென்னை.2007
(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் ‘ஜநவிநோதினி’ இதழ் குறித்து ஆய்வு செய்து முடித்துள்ளார்)

நன்றி : மாற்றுவெளி


 maatruveli_jun12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக